WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 2, 2016

6 மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விவகாரம்: விரைந்து முடிவெடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.


மிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 746 மெட்ரிக் பள்ளிகளை மூடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இறுதி முடிவை அரசு விரைவாக எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் "மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குநர் ஏ.நாராயணன் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் உள்ள 746 மெட்ரிக் பள்ளிகள், அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விதிமுறைகளைக் கூட கடைப்பிடிக்கவில்லை. இந்தப் பள்ளிகளுக்கு, கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தாற்காலிக அங்கீகாரத்தை பள்ளிக் கல்வித்துறை வழங்கி வருகிறது. அங்கீகாரமற்ற பள்ளிகளை மூட வேண்டும்: இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, மே 31-ஆம் தேதி வரை ஒரே ஒரு முறை என்ற அடிப்படையில், தாற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும், இதற்கு மேல் நிலம் உள்ளிட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் நீட்டிக்கப்படாது என்றும் அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது 746 மெட்ரிக் பள்ளிகளில், பல பள்ளிகள் அரசு நிர்ணயம் செய்த தகுதிகளை பூர்த்தி செய்யாமல் உள்ளன. எனவே, இந்தப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தாற்காலிக அங்கீகாரத்தை நீட்டிக்க கூடாது. சம்பந்தப்பட்ட பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவிட வேண்டும். அங்கீகாரம் பெறாத இந்த பள்ளிகளின் விவரங்களை பொது மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக விளம்பரப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார். கால அவகாசம் தேவை: இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நடைபெற்ற வாதம் பின்வருமாறு: கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன்: பள்ளிகளுக்கு அங்கீகாரம் தொடர்பாக, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் நிர்வாகிகள் சங்கம் சார்பில், இந்த உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை தனி நீதிபதி விசாரித்தார். அவர் தனது உத்தரவில், "ஒரு பள்ளிக்கு எவ்வளவு நிலம் இருக்க வேண்டும் என்பது குறித்து, தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தலைமையில் கடந்த 2013-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், 746 மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து, ஜூன் 30-ஆம் தேதிக்குள் அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி, இந்தப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து முடிவு எடுப்பதற்கு தமிழக அரசுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. மனுதாரர்: கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் இந்த பள்ளிகள் எல்லாம் தாற்காலிக அங்கீகாரம் என்ற பெயரில் 13 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும், இந்த அங்கீகாரம் நீட்டிக்கப்பட்டு வந்துள்ளது. இதற்கு மேலும் இது போன்ற நடவடிக்கையை அனுமதிக்க கூடாது. அங்கீகாரம் இல்லாத அனைத்து பள்ளிகளையும் இழுத்து மூடுவதற்கு உத்தரவிட வேண்டும். நீதிபதிகள்: இந்த பள்ளிகளில் எவ்வளவு குழந்தைகள் படிக்கின்றனர்? மனுதாரர் : சுமார் 5 லட்சம் குழந்தைகள் படித்து வருகின்றனர். நீதிபதிகள்: அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை எல்லாம் மூடிவிட்டால், அந்த குழந்தைகள் எங்கு செல்வார்கள்? மனுதாரர் : அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். நீதிபதிகள்: அந்த பள்ளிகளிலும் இடம் இல்லை என்றால், குழந்தைகளை எங்கு சேர்ப்பது? அனைத்து பள்ளிகளையும் மூடினால், அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். மனுதாரர்: பிரச்னை வராமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுப்பது அரசின் கடமையாகும். நீதிபதிகள்: நடைமுறைக்கு சாத்தியமான முடிவுகளை மட்டுமே எடுக்க முடியும். மேலும், இந்தப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பிரச்னையில், அரசு இதுவரை மெத்தனப் போக்கை கையாண்டு வருகிறது. இதற்கு மேலும் இழுத்தடித்தால், கடுமையான உத்தரவுகளை நாங்கள் பிறப்பிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை செய்கிறோம் என்றனர் நீதிபதிகள். உடனடியாக முடிவெடுக்க வேண்டும்: இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: பாதிக்கப்பட்ட பள்ளிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், ஜூன் 30-ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் மேலும் கால தாமதம் செய்யாமல், தகுந்த முடிவினை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும். வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜூலை 19-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம் என தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.