பாங்க் ஹெட் ஆபீசில் இருந்து பேசறோம். உங்க 'ஏடிஎம் கார்டு', 'டெபிட் கார்டு' காலாவதியாகப் போகுது. உங்க கார்டு நம்பரில் கடைசி மூணு நம்பரை சொல்லுங்க, உடனே கார்டை 'ஆக்டிவேட்' பண்ணிக்கொடுக்கிறோம்...' இப்படி மொபைல்போன் அழைப்பு வந்தால், உஷாராகி விடுவது நல்லது. பாங்கில்
இருந்து பேசுகிறார் என, நம்பி பேசினால், கணக்கில் இருக்கும் பணத்தை அள்ளி விடுவார்கள்.
மக்களிடம் மொபைல்போன் பயன்பாடு அதிகரித்ததில் இருந்து, நுாதன மோசடியும் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக, 'உங்க 'சிம்'க்கு சிறப்பு பரிசு விழுந்திருக்கு. பரிசை அனுப்பி வைக்கிறோம்; முகவரியை சொல்லுங்க' என, பேசுகின்றனர். எந்த பரிசும் வேண்டாம் என்றால், உடனே இணைப்பு துண்டிக்கப்படும்.
பதில் பேச துவங்கி முகவரியை பெற்றதும், 'உங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசு விழுந்திருக்கு, அந்த பொருளை அனுப்ப, தபால் செலவுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அனுப்ப வேண்டும். நாங்கள் சொல்லும் வங்கி கணக்கில் அந்த பணத்தை செலுத்துங்கள்' என்கிறார்கள். அதன்படி பணத்தை செலுத்தினால், பொருள் எதுவும் வருவதில்லை.
அதேபோன்று, இந்தியும் தமிழும் கலந்து, மொபைல்போன்களுக்கு அழைப்பு வருகிறது. போனில் பேசுவர், மிகவும் பரபரப்பாக, 'நாங்க பாங்க் ஹெட் ஆபீசில் இருந்து பேசறோம். உங்க 'ஏடிஎம் கார்டு' காலாவதியாகப் போகுது. உங்க கார்டு நம்பரில் கடைசி மூணு நம்பரை சொல்லுங்க, உடனே கார்டை 'ஆக்டிவேட்' பண்ணிக்கொடுக்கிறோம்' என்கிறார்.
அதன்படி, கார்டிலுள்ள கடைசி மூன்று எண்களை சொன்னதும், வங்கி கணக்குடன் பதிவு செய்துள்ள மொபைல்போன் எண்ணுக்கு, 'ஒன் டைம் பாஸ்வேர்டு' எண் 'எஸ்.எம்.எஸ்' ஆக வருகிறது. போன் லைனில் காத்திருக்கும் ஆசாமி, அவசர அவசரமாக, 'மெசேஜ் வந்த நான்கு இலக்க எண்ணை சொல்லுங்கள்' என்பார். அந்த எண்ணை தெரிவித்த அடுத்த நொடியில், வங்கி கணக்கில் உள்ள பணத்தை அப்படியே எடுத்து விடுகின்றனர்.
இதெல்லாம் எப்படி சாத்தியம்? வங்கி அதிகாரிகள் உதவியின்றி, கணக்கை கையாள முடியுமா? என்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால், சமீபத்திய சில நிகழ்வுகள், இதெல்லாம் சாத்தியமே
என்பதை உணர்த்துகின்றன.அதனால் 'வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, 'ஏடிஎம் கார்டு', 'டெபிட் கார்டு' நம்பரை கேட்டால், வாடிக்கையாளர்கள் யாரும் தெரிவிக்க வேண்டாம்' என்று எச்சரிக்கிறார் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்.
அவர் கூறியதாவது:
மொபைல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தி, வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, நவீன சாப்ட்வேர் டெக்னிக்கை கையாண்டு பண மோசடி செய்கின்றனர். இது தொடர்பாக, மாநகர சைபர் கிரைம் பிரிவுக்கு, 225 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் இருந்தும், 10 ஆயிரம் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை, பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளனர். மோசடி அனைத்தும் வடமாநிலத்தில் இருந்து கையாளப்படுகிறது. இதுபற்றி விசாரித்து வருகிறோம்.
வங்கிகளையும் 'அலர்ட்' செய்து, வங்கியின் சாப்ட்வேர் சிஸ்டத்துக்கு, செக்யூரிட்டி அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளோம். பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதேபோன்று, எக்காரணம் கொண்டும் 'ஏடிஎம் கார்டில்' ரகசிய குறியீட்டு எண்ணை எழுதி வைக்காதீர்கள்.
இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.