WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, March 23, 2017

பட்டச் சான்றிதழ்களிலும் இனி ஆதார் எண்: முறைகேடுகளைத் தடுக்க யுஜிசி அறிவுறுத்தல்.


சான்றிதழ் முறைகேடுகளைத் தடுப்பதற்காக பல்கலைக்கழகங்கள் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ், பட்டச் சான்றிதழ்களில் 
ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. தொழில்நுட்பம் வளர்ந்துவரும் நிலையில், போலிச் சான்றிதழ்களைத் தயாரித்து அரசு வேலைவாய்ப்பைப் பெறுவதும், வேறு சில முறைகேடுகளில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்தச் சான்றிதழ் முறைகேடுகளைத் தடுப்பதற்காக, மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை இடம்பெறச் செய்ய யுஜிசி அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது. மாணவரின் புகைப்படம், சிறப்பு குறியீடுகள் என்பன உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை சான்றிதழ்களில் இடம்பெறச் செய்யவேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், தற்போது சான்றிதழ்களில் மாணவரின் ஆதார் எண்ணையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியிருக்கிறது. இதற்கு பேராசிரியர்களும், தேர்வுக் கட்டுப்பாட்டாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் திருமகன் கூறியது: சான்றிதழ் முறைகேடுகளைத் தடுப்பதற்காக மாணவர்களின் சான்றிதழ்களில் இடம்பெறச் செய்வதற்கு, இதுவரை பத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களை யுஜிசி வெளியிட்டிருக்கிறது. மேலும், இந்தப் பாதுகாப்பு அம்சங்களை யுஜிசி குறிப்பிட்டிருக்கும் நிறுவனங்கள் மூலம்தான் சான்றிதழ்களில் இடம்பெறச் செய்யவேண்டும் எனவும் அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால், நிதிநிலை காரணமாக, இந்த அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் இடம்பெறச் செய்வதில் பல்கலைக்கழகங்களுக்கு சிக்கல் உள்ளது. இவற்றை இடம்பெறச் செய்ய ஒரு சான்றிதழுக்கு ரூ.50 வரை செலவாகும். ஆனால், மாணவரிடம் ரூ.25 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதனால், மாணவரின் புகைப்படம், சிறப்பு குறியீடு உள்ளிட்ட ஒருசில பாதுகாப்பு அம்சங்கள் மட்டுமே தற்போது சான்றிதழ்களில் இடம்பெறச் செய்யப்படுகின்றன. இந்த நிலையில், மாணவரின் ஆதார் எண்ணை சான்றிதழ்களில் இடம்பெறச் செய்யவேண்டும் என யுஜிசி கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கு செலவு ஏதும் ஆகாது. மாறாக, ஆதார் எண் மூலம் மாணவரின் முழு விவரங்களும் வந்துவிடும் என்பதால், சான்றிதழ் முறைகேட்டைத் தடுக்க இது மிகச் சிறந்த ஆலோசனை என்றார் அவர். 

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.