தமிழகத்தில் 32 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள
முதல்வர் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்ற எதிர்பார்ப்பு கல்லூரி பேராசிரியர்களிடையே எழுந்துள்ளது.
இதற்கிடையே, அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் நீண்ட நாள்களாக எதிர்பார்த்திருந்த இடமாறுதல் கலந்தாய்வை வருகிற 27 முதல் 30-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு நடத்த தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
தமிழகத்தில் 80 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த அரசுக் கல்லூரிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் ஓராண்டு பணி நிறைவுபெற்றதும், அவர்களின் பணி மூப்பு அடிப்படையில் பொதுக் கலந்தாய்வு மூலம் விரும்பிய இடங்களுக்கு இடமாறுதல் வழங்கப்படும்.
இந்த ஆசிரியர் இடமாறுதல்களுக்கு முன்னதாக, பணி மூப்பின் அடிப்படையில் இணைப் பேராசிரியர்களுக்கு முதல்வர் பதவி உயர்வு வழங்கப்பட்டு, முதல்வர் பணியிடம் காலியாக உள்ள கல்லூரிகளில் நியமிக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்பட வேண்டிய இடமாறுதல் கலந்தாய்வு நிகழாண்டில் செப்டம்பர் மாதம் முடிந்துவிட்ட நிலையிலும் நடத்தப்படாமலே இருந்தது. முதல்வர் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை.
இந்த இடமாறுதல் கலந்தாய்வை நடத்த தமிழக அரசு இப்போது ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி, வருகிற 27-ஆம் தேதி முதல் நான்கு நாள்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்ற தலைவர் சிவராமன், பேராசிரியர்கள் கூறியது:
வழக்கமாக அரசுக் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் காலியாக உள்ள முதல்வர் பணியிடம், பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் முதலில் நிரப்பப்படும். அதன் பிறகு ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். அப்போதுதான் கல்லூரிகளில் ஆசிரியர் காலியிடம் மீண்டும் ஏற்படாமல் இருக்கும்.
ஆனால், நிகழாண்டில் 11 முதல்நிலை (கிரேட்-1) கல்லூரிகள், 21 இரண்டாம் நிலை (கிரேட்-2) கல்லூரிகள் என மொத்தம் 32 அரசுக் கல்லூரிகளில் பல மாதங்களாக முதல்வர் பணியிடம் காலியாகவே உள்ளது. இந்தக் கல்லூரிகளை கடந்த ஜூன் மாதம் முதல், பொறுப்பு முதல்வர்களே நிர்வகித்து வருகின்றனர்.
இவர்களால் நிர்வாகரீதியாக திடமான முடிவுகளை எடுக்க முடியாது என்பதால், கல்லூரியின் வளர்ச்சியும் கல்வியும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கல்லூரி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வை தமிழக அரசு இப்போது அறிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க விஷயம் என்றபோதும், முழுநேர முதல்வர்கள் நியமனம் மேலும் தாமதமாகக் கூடும் என்ற நிலையை இந்த அறிவிப்பு ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே, கல்லூரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு 32 அரசுக் கல்லூரிகளிலும் முழு நேர முதல்வர்களை விரைவில் நியமிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.